திண்டுக்கல்: திண்டுக்கல் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளான வெள்ளோடு, நிலக்கோட்டை, செம்பட்டி ஆகிய பகுதிகளில், விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் மல்லிகை பூ, முல்லை பூ, கனகாம்பரம், செவ்வந்தி போன்ற பல்வேறு பூக்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த பூக்களை திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா வணிக வளாகத்தில் அமைந்துள்ள பூ மார்க்கெட்டிற்கு, விற்பனைக்காக கொண்டு செல்வது வழக்கம். அந்த வகையில், கடந்த வாரங்களில் பூக்களின் விலை குறைவாக காணப்பட்டது. இந்நிலையில், தற்பொழுது அதிகமான பனிப்பொழிவின் காரணமாக, திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு பூக்கள் வரத்து குறைவாக காணப்படுகிறது.
மேலும், நாளை (ஜன.15) மக்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ளதால், பூக்களின் விலை பன்மடங்கு உயர்ந்து காணப்படுகிறது. மேலும், திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இருந்து சென்னை, சேலம், கேரளா, ஆந்திரா போன்ற பகுதிகளுக்கு பூக்கள் அதிக அளவில் அனுப்பப்படுகிறது.
இதனிடையே, சராசரி நாட்களில் ஒரு கிலோ மல்லிகை 200 முதல் 300 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 3 ஆயிரத்து 500 முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. அதே போன்று, ஒரு கிலோ முல்லை பூ 2 ஆயிரம் ரூபாய் முதலும், கனகாம்பரம் 800 ரூபாய் முதலும், ஜாதிப்பூ ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், ஒரு கிலோ செவ்வந்தி பூ 150 ரூபாய்க்கும், சம்பங்கி பூ 200 ரூபாய்க்கும், அரளி 300 ரூபாய்க்கும், கோழி கொண்டை 70 ரூபாய்க்கும், செண்டு மல்லி 60 ரூபாய்க்கும், ரோஸ் 250 ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை ஏற்றத்தால் அப்பகுதி மலர் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: பொய் வழக்கில் ஏரோநாட்டிக்கல் பட்டதாரிக்கு சிறை; இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை மேற்கொள்க