திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரியில் சுற்றுலா துறைக்கு சொந்தமான படகு குழாம் அமைந்துள்ளது. இந்த படகு குழாமில் சுற்றுலா பயணிகளுக்காக படகு சவாரி இயக்கப்பட்டு வருகிறது. இந்த படகு குழாமில் அலங்கரிக்கப்பட்ட படகு ஒன்றில் நடு ஏரியில் வைத்து விதிமுறைகளை மீறி படகில் வைத்து வானவேடிக்கை நடத்தப்பட்டது.
படகுகள் இயக்குவதற்கு பல்வேறு விதிமுறைகள் நடைமுறையில் இருந்து வருகிறது. அந்த விதிகளை எல்லாம் மீறி அலங்கரிக்கப்பட்ட படகில் வானவேடிக்கை நடத்தப்பட்டுள்ளது. வெடிபொருட்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த வானவேடிக்கை காரணமாக ஏரியில் புகை மண்டலம் சூழ்ந்தது.
அலங்கரிக்கப்பட்ட படகில் சென்ற பிரமுகர் யார், ஏரி நடுவில் வானவேடிக்கைகள் நடத்தியது திருமண நிகழ்ச்சியா இல்லை வேறு ஏதும் கலை நிகழ்ச்சிகளா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.