திண்டுக்கல்லில் தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பாக காந்தி நினைவு நாளையொட்டி நடைபெற்ற மனிதச் சங்கிலி அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராகத் திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி பங்கேற்றார்.
இதில் கலந்துகொண்டு பேசிய திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி, ”குடியுரிமை திருத்தச் சட்டமானது ஜனநாயகத்திற்கும் அரசியல் சாசனத்திற்கும் எதிரானது. இந்தச் சட்டத்தினால் ஒரு கோடிக்கும் மேலான மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளை இழப்பார்கள்.
இது குடியாட்சி தத்துவத்திற்கு எதிரான ஒன்றாகும். நாம் அனைவரும் மத நல்லிணக்கத்துடன் சகோதரர்களாக வாழ்ந்துவருகிறோம். ஆனால் மக்களை மத ரீதியாக பிரித்தாள நினைப்பவர்கள் தங்கள் சுயலாபத்திற்காக இந்தச் சட்டத்தை பயன்படுத்த நினைக்கிறார்கள்.
இதன்மூலம் மதநல்லிணக்கத்தைச் சிதைத்து ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்குகின்றனர். மேலும், கேரள அரசு துணிச்சலாக சட்டப்பேரவையில் இந்தச் சட்டத்தை 'நாங்கள் நிறைவேற்றமாட்டோம்' என்று கூறியுள்ளது. ஏனெனில் மத்திய அரசு இயற்றிய சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்பதை நாங்கள் பதிவுசெய்ய விரும்புகிறோம்.
ஆகவே தமிழ்நாடு அரசு இந்தச் சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என்ற தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும். அதேபோல மத்திய அரசு இந்தச் சட்டத்தை திரும்பப் பெறும்வரை எங்களது போராட்டம் ஓயாது. தொடர்ந்து ஒன்றிணைந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்போம்” எனக் கூறினார்.
திண்டுக்கல் பழனி புறவழிச் சாலையில் தொடங்கிய மனிதச் சங்கிலி நகரின் முக்கியப் பகுதிகள் வாயிலாக நகரின் மையப் தெருக்களில் ஊர்வலமாகச் சென்றது.
சுமார் 6 கிலோமீட்டர் நீளத்திற்கு நீண்டிருந்த இந்த மனிதச் சங்கிலி அணிவகுப்பில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். இதில் திண்டுக்கல் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பாலபாரதி, சி.பி.எம். மாவட்ட செயலாளர் சச்சுதானந்தம், திமுக மெசேஜ் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் கிறிஸ்தவர்கள் பங்கேற்காமல் அமைதி காப்பதாக முன்வைக்கப்பட்ட விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாற்போல இந்தப் பிரமாண்ட அணிவகுப்பு அமைந்திருந்தது.
இதையும் படிங்க : மனிதச் சங்கலிப் போராட்டத்தில் ஊடுருவிய நபரால் பரபரப்பு