திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை புரிவர். மேலும், கிருத்திகை, பங்குனி உத்திரம், தைப்பூசம் போன்ற விசேஷ நாட்களில் லட்சக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று கிருத்திகை தினத்தை முன்னிட்டு, ஏராளமானோர் சாமி தரிசனம் செய்ய வந்தனர். வழக்கமாக இரவு 9.30 மணிக்கு ராக்கால பூஜை முடிந்து கோயில் நடை அடைக்கப்படும். அப்போது இரவு 9 மணி வரை பக்தர்கள் மலை மீது ஏறுவதற்கு கோயில் பாதுகாவலர்களால் அனுமதி வழங்கப்படும்.
இந்த நிலையில், திருப்பூரைச் சேர்ந்த பக்தர் தன் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய இரவு 9 மணிக்கு மேலாக மலையின் அடிவாரத்தில் உள்ள கதவுகளின் படிக்கட்டுகள் வழியாக மலை மீது ஏறிச் செல்ல அனுமதிக்கக் கோரி, பணியில் இருந்த கோயில் பாதுகாவலர்களிடம் வாக்குவாதம் செய்து உள்ளார். இந்த வாக்குவாதம் பின் தகராறாக மாறி ஒருவரையொருவர் தாக்கி உள்ளனர்.
பின்னர், பணியில் இருந்த சக பாதுகாவலர்கள் பக்தரை இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைக்க முயன்று உள்ளனர். இவ்வாறு பழனி மலை அடிவாரத்தில் பக்தரும், கோயில் பாதுகாவலர்களும் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: "தமிழகத்தில் கோயில்களை மாநில அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அநியாயம்" - பிரதமர் மோடி