திண்டுக்கல்: சின்னாளபட்டி அருகே உள்ள செட்டியபட்டி பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி வசந்தி. இத்தம்பதிக்கு சந்தோஷ்குமார், விஜய் கணபதி என்ற இரு மகன்கள் இருந்தனர். திருப்பதியும், அவரது மனைவியும் கூலித் தொழிலாளிகள்.
திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் (செப்டம்பர் 30) இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்துவந்தது. இந்நிலையில் நேற்று (அக்டோபர் 1) காலை திருப்பதி தனது மனைவியை வேலைக்கு அனுப்பிவிட்டு, மழையில் நனைந்தபடி வீட்டிற்கு வந்துள்ளார்.
மூவர் உயிரிழப்பு
அப்போது தலையைத் துண்டால் துவட்டிவிட்டு, ஈரத்துண்டை வீட்டிற்கு வெளியே உள்ள இரும்புக்கொடி கம்பியில் காய போட்டுள்ளார். அந்நேரம் திருப்தியை மின்சாரம் தாக்கியுள்ளது. திருப்பதியின் அலறல் சத்தம் கேட்டு, அவரது மகன்கள் இருவரும், தந்தையைக் காப்பாற்றுவதற்காகப் பிடித்துள்ளனர். இதில் அவர்கள் மீதும் மின்சாரம் தாக்கியுள்ளது. இதனால் மூன்று பேரும் கத்தியுள்ளனர்.
இவர்களது சத்தம் கேட்டு அருகில் இருந்த முருகனும், அவரது மனைவி சூர்யாவும், இம்மூவரையும் மரக்கட்டையால் அடித்து கீழே விழச்செய்துள்ளனர். பின்னர் ஐந்து பேரும் மின்சாரம் தாக்கியதில் தூக்கிவீசப்பட்டனர். இதில் திருப்பதியும், அவரது இரண்டு மகன்களும் உயிரிழந்தனர். காப்பாற்றச் சென்ற முருகனும், அவரது மனைவி சூர்யாவும் படுகாயத்துடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இதையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் திண்டுக்கல் மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளர் அருண், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
இதையும் படிங்க: கல்லூரி மாணவர்கள் மோதல் - காவலர்கள் விசாரணை!