திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் வருகிற 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை ஒட்டி அறநிலையத்துறை மற்றும் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பழனி கோயில் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்தவேண்டும் என தெய்வத்தமிழ் பேரவை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி தெய்வத்தமிழ்ப் பேரவை சார்பில் பழனியில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தெய்வத்தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது மணியரசன் தெரிவித்ததாவது, 'பழனி மலைக்கோயிலில் நடைபெறும் குடமுழுக்கு தமிழில் நடத்தப்பட வேண்டும். சமஸ்கிருதத்தில் வேள்வி யாகம் நடத்தும் பிராமணர்களுக்கு சமமான எண்ணிக்கையில் தமிழ் ஓதுவார்களையும் நியமித்து தமிழிலேயே குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். கோயில் கருவறை, மூலவர் மற்றும் ராஜகோபுரம் ஆகியவற்றிலும் தமிழ் ஓதுவார்கள் புனித தீர்த்தத்தை ஊற்றி தமிழில் குடமுழுக்கு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 20ஆம் தேதி பழனியில் தெய்வத்தமிழ் பேரவை சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும், இதில் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவித்தார். ஆலோசனைக் கூட்டத்தின் போது வடகுரு மடாதிபதி குச்சனூர் கிழார், பதினென் சித்தர் பீட சித்தர் மூங்கிலடியார் உள்ளிட்டப் பலர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: நாதம் 108 என்ற பெயரில் கந்தசஷ்டி கவசம்: மனமுருகி பாடிய மாணவர்கள்