திண்டுக்கல் மாவட்டம் கரிசல்பட்டி காமாட்சிபுரம் பகுதியில் இரவைப் பயிராக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பருத்தி, வெண்டை உள்ளிட்ட பணப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தன.
சூரியகாந்தி
அதன் இரண்டாம் கட்டமாக தற்போது மானாவாரி பயிராக சூரியகாந்தியை உழவர்கள் சாகுபடி செய்துவருகின்றனர். சூரியகாந்தி வளர்வதற்கு ஏற்ற வகையில் இந்தப் பகுதி மண் இருப்பதால், அதிக அளவில் உழவர்கள் இந்தப் பயிரைச் சாகுபடி செய்துவருகின்றனர்.
ஒரு ஏக்கர் சூரியகாந்தி பயிர்ச் சாகுபடி செய்வதற்கு 20 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே செலவாகிறது. மேலும் தோட்டக்கலைத் துறையினர் பரிந்துரைக்கும் நேர்த்தியான ரக விதைகளை மட்டுமே இப்பகுதி உழவர்கள் மானாவாரியாக சாகுபடி செய்கின்றனர்.
சாகுபடிக்குச் சாதகம்
இதனால் நல்ல மகசூல் கிடைப்பதாகவும் அப்பகுதி உழவர்கள் கூறுகின்றனர். அறுவடை செய்தபிறகு சூரியகாந்தி விதை கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தனியார் இந்த விதைகளை நேரடியாகக் கொள்முதல் செய்துகொள்வதால், தங்களின் அறுவடைக்குப் பிறகு வர்த்தகம் செய்வது பெரிய அளவில் பாதிப்பு இல்லை என உழவர்கள் கருதுகின்றனர்.
தற்போதைய பருவநிலை சூரியகாந்தி பயிருக்குச் சாதகமாக இருப்பதால், இப்பகுதி உழவர்கள் சூரியகாந்தி பயிர்ச் சாகுபடி செய்வதற்கு ஆவலாக உள்ளனர்.
இதையும் படிங்க: 'உரம் விலை உயர்வைக் கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்'