திண்டுக்கல்: பழனியை அடுத்துள்ள அம்மாபட்டி பகுதியில் நில உச்சவரம்பு சட்டத்தின்படி கையகப்படுத்தப்பட்டு ஏழைகளுக்கு வழங்கிய நிலங்களை தனி நபர்கள் பறித்துக் கொண்டதாகவும், அரசு உபரி நிலங்களை நிலமில்லா ஏழை விவசாயிகளுக்கு பட்டா வழங்கவும் வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பழனி கோட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றது.
தொடர் காத்திருப்பு போராட்டமாக அறிவிக்கப்பட்டு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று காலை முதல் பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் குவிந்தனர். போராட்டக்காரர்களை கோட்டாட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கமுடியாது என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் போராட்டக்காரர்கள் கோரிக்கை குறித்து கோட்டாட்சியர் சிவக்குமாரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இது குறித்து விவரங்களை அரசுக்கு அறிவித்து நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் தெரிவித்தார். போலீசார் போராட்டக்காரர்களிடம் தெரிவித்தனர். மேலும் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். போலீசாரின் அறிவுறுத்தலை ஏற்காத போராட்டக்காரர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக தெரிவித்தனர். அனைவரையும் கைது செய்ய போலீசார் முயன்ற போது, கைது ஆக மறுத்ததால் போராட்டக்காரர்களை போலீசார் வழுக்கட்டாயமாக கைது செய்ய முயன்றனர்.
அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டக்காரர்கள் அனைவரையும் குண்டுக்கட்டாக கைது செய்து அரசு பேருந்தில் ஏற்றினர். கைது செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளையும், பெண்களையும் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மயிலாடுதுறையில் குறுவை பயிர் காப்பீடு திட்டம் அறிவிக்கப்படாததை கண்டித்து விவசாயிகள் தர்ணா