திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் அதிகப்படியாக ரெட் லேடி ரக பப்பாளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, நத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளான வத்திப்பட்டி, வலையபட்டி, லிங்கவாடி பகுதிகளில் 100 ஏக்கருக்கு மேல் பப்பாளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இவ்வகை பப்பாளிகள் பயிர் செய்ததிலிருந்து எட்டு மாதங்களில் பலன் தர தொடங்கிவிடும். தொடர்ந்து 28 மாதங்கள் வரை காய் காய்க்கும்.
இந்நிலையில், பப்பாளி சாகுபடி இந்தாண்டு பெய்த மழை, கிணற்று தண்ணீர் பாசனத்தில் நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது. இங்கு விளையும் பப்பாளி பழங்களை மதுரை, பெங்களூரு பகுதிகளிலிருந்து வரும் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
ஆனால் கரோனா எதிரொலியாக விலையில்லாமல் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் விளைச்சல் இருந்தும் காய்களுக்கு விலை இல்லாததால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் பப்பாளி லாபம் தரக்கூடிய பயிராக இருந்தாலும் ஒரு கிலோ ரூ.22 முதல் 28 விலை போகும். தற்போது காய்கள் கிலோ ஐந்து முதல் ஏழு ரூபாய்க்கு மட்டுமே விலை போகிறது. இதனால் விளைச்சல் இருந்தும் அதைக் கொண்டுபோக முடியாமல் குறைந்த விலைக்கு வியாபாரிகளுக்கு விற்பனை செய்துவருகின்றனர்.
இந்த காரணத்தால் விவசாய வேலை ஆள்களுக்குச் சம்பளம் தரக்கூட போதவில்லை என வேதனையுடன் புலம்புகின்றனர் விவசாயிகள்.