திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோசுகுறிச்சி கரையூரைச் சேர்ந்தவர் மலைச்சாமி(45). இவரிடம் திருச்சி மாவட்டம் மலம்பட்டியைச் சேர்ந்த சாமியார் குமரேசன்(40) என்பவர் ஒரு மடங்கு நகை கொடுத்தால் இரண்டு மடங்கு தங்க நகையாக மாற்றி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பிய மலைச்சாமி தான் வைத்திருந்த 10 பவுன் நகையை குமரேசனிடம் கொடுத்துள்ளார். தொடர்ந்து மலைச்சாமி தோட்டத்து வீட்டின் அருகிலேயே குமரேசன் கொடுத்த நகைகளை பூமியை தோண்டி புதைத்து வைத்தார்.
அவர் சொன்ன குறிப்பிட்ட நாளைக்கு பிறகு நகையை போய் தேடியுள்ளனர். ஆனால், அந்த இடத்தில் நகை இல்லாமல் மாயமாகியதைக் கண்டு மலைச்சாமி அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக இது குறித்து மலைச்சாமி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் நத்தம் காவல் ஆய்வாளர் ராஜமுரளி, உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து போலி மந்திரவாதி குமரேசனை கைது செய்தனர்.
மேலும், அவரிடம் மோசடி செய்யப்பட்ட 10 பவுன் நகையை கைப்பற்றினர். தொடர்ந்து குமரேசனிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.