திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே பண்ணப்பட்டி பகுதியில் உள்ள விவசாயத் தோட்டங்களில், கடந்த இரு வாரங்களாக காட்டு யானைகள் கூட்டம் அட்டகாசம் செய்துகொண்டிருக்கின்றன. இதனிடையே அந்த யானைக் கூட்டத்திலிருந்து இரண்டு காட்டு யானைகள் வழிமாறி அருகே உள்ள லெக்கையன்கோட்டை மலையடிவாரத்திற்கு நேற்று வந்தன. இதனைப் பார்த்த அப்பகுதி விவசாயிகள் உடனே வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் அங்கு சென்ற வனத்துறை அலுவலர்கள் இரண்டு யானைகளை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்தது. இந்நிலையில் இன்று காலை லெக்கையன்கோட்டை மலையடிவாரத்திலுள்ள விவசாய நிலங்களுக்கு மேலும் எட்டு யானைகள் வந்தன. இதனால் தற்போது மொத்தமாக 10 காட்டு யானைகள் அங்குள்ள விவசாய நிலங்களில் முகாமிட்டுள்ளன.
இந்த காட்டு யானைகளை விரட்டும் பணியில் திண்டுக்கல், கோவை, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வனத்துறை ஊழியர்கள் என 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து வனத்துறையினர் வெடிவைத்து விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ள காட்டு யானைகளால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.