திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில், அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்கின்றனரா என்பதைக் கண்டறிவதற்காகவும், நடவடிக்கை எடுப்பதற்காகவும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் கொடைக்கானலில் பறக்கும் படையினர் மெத்தனப் போக்குடன் செயல்படுகின்றனர் என்று மக்களால் கூறப்படுகிறது. பெயரளவிற்கு உழவர்கள், வியாபாரிகள் உள்ளிட்டவர்களைச் சோதனை என்ற பெயரில், அவர்களிடம் உள்ள சொற்ப பணத்தைப் பறிமுதல் செய்துவருகின்றனர் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
பறக்கும் படையினர் பல இடங்களுக்குப் பிரிந்துசென்று சோதனை செய்ய வேண்டும். ஆனால் இவர்களோ, ஒரே இடத்தில் முகாமிட்டு சோதனை என்ற பெயரில் ஓய்வெடுத்துவருகின்றனர். பின் பெருமாள் மலைப்பகுதியில், பறக்கும் படையினர் இரண்டு பிரிவுகளும் ஒரே இடத்தில் உள்ளனர்.
இதுபோக கொடைக்கானல் ஏரி சந்திப்பு அருகில், இவர்கள் சோதனை செய்வதால், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே பறக்கும் படையினர் பிரிந்துசென்று அரசியல் கட்சியினரைத் தீவிரமாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ’மதிமுக நம் எதிரியே இல்லை’ - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி