திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு குடகனாறு, சந்தான வர்த்தினி உள்ளிட்ட ஆறுகள், ஆறு அணைகள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாசன குளங்கள் மற்றும் ஏராளமான தடுப்பணைகள் உள்ளன.
இதில் அணைகள், குளங்கள் அவ்வப்போது தூர்வாரப்படுவதுடன், விவசாயப் பயன்பாட்டுக்காக அவைகளில் வண்டல்மண் அள்ளுவதற்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.
விவசாய பயன்பாட்டுக்கு இல்லாமல் பிற தேவைக்காக அணைகள், குளங்களிலிருந்து அனுமதி இல்லாமல் ஒரு சிலர் மணல் அள்ளி செல்வது நிகழ்வுகளும் நடக்கின்றனர். இதேபோல் ஆறுகளில் மணல் அள்ளும் சம்பவங்களும் நடக்கிறது.
நள்ளிரவுகளில் மணல் திருட்டு
மணல் அள்ளும் சம்பவங்கள் நள்ளிரவு நேரத்தில் நடப்பதால் அந்தப் பகுதிக்கு அருகில் இருக்கும் கிராம மக்களுக்குத் தெரிவதில்லை. அவ்வாறு தெரிந்து அந்தக் கும்பலைத் தடுக்க சென்றாலும் மோதல் ஏற்படுகிறது.
8 தனிப்படைகள் அமைப்பு
உரிய அனுமதி இல்லாமல் மணல் அள்ளும் கும்பல்கள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து மணல் அள்ளும் கும்பலைப் பிடிக்கத் காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா உத்தரவின் பேரில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி நிலக்கோட்டை, ஆத்தூர், நத்தம், பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர காவல் கண்காணிப்பாளர் நேரடி கண்காணிப்பில் இரண்டு காவல் தனிப்படைகள் செயல்படவுள்ளன.
இந்தத் தனிப்படைகளில் தலா ஒரு சார்பு ஆய்வாளர் தலைமையில் 5 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தந்த பகுதிகளில் மணல் அள்ளும் கும்பலைப் பிடிக்கும்படி இவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புகார் எண்கள் அறிவிப்பு
அதேபோல் காவல் கண்காணிப்பாளர் நேரடி கண்காணிப்பில் இருக்கும் தனிப்படையினர், அனைத்து பகுதிகளிலிருந்தும் வரும் புகாரின் பேரில் தேடுதல் பணியில் ஈடுபடுவார்கள். அனுமதி இல்லாமல் மணல் அள்ளுவது பற்றித் தெரியவந்தால் பொதுமக்கள் உடனடியாகத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம்.
இதற்காகத் தொலைபேசி எண் 0451 - 2461500, செல்போன் எண் - 9498101520 ஆகியவற்றில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மதூர் கல்குவாரி விபத்து: தாமதமாகத் தொடங்கிய மீட்புப் பணிகள்!