திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அவருடன் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், “மத்தியில் நிலையான ஆட்சி அமைய திறமையான பிரதமர் வரவேண்டும். அதற்கு நமது பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவிற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள். மத்தியில் 15 ஆண்டுகாலம் ஆட்சி அதிகாரத்திலிருந்த திமுக தமிழ்நாட்டு மக்களுக்காக என்ன வளர்ச்சித் திட்டங்களை செய்துள்ளது. திமுக எப்போதுமே தனது சொந்த நலனுக்காகவே ஆட்சிக்கு வர நினைக்கிறது. அவர்களது நலனுக்காக மட்டுமே திமுக பாடுபடும். மக்கள் நலனுக்காக இல்லை என்பதை மக்கள் உணரவேண்டும்.
முதலமைச்சர் எடப்பாடி பரப்புரை ஒவ்வொரு தேர்தலின்போதும் கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கை தயார் செய்வார்கள். ஆனால், அதை ஒருபோதும் செயல்படுத்த மாட்டார்கள். அதிமுக அரசு எப்போதுமே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சியாக உள்ளது. திமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு முழுவதும் இருளில் மூழ்கிக் கிடந்தது. அப்போது தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா அறிவித்தது போல தமிழ்நாடு மின்சார துண்டிப்பு அற்ற மாநிலமாக மாற்றியுள்ளார். திமுக ஆட்சிக்காலத்தின் போது துணை முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் மதுரை மாநகருக்குள் நுழைய முடியாத சூழ்நிலை இருந்தது. ஆனால், எங்கள் ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சுதந்திரமாக மதுரை நகருக்குள் நடைபயிற்சி செல்கிறார். இதுவே எங்கள் அரசின் சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பிற்கு கிடைத்த சான்று. சிறுபான்மை மக்களுக்கு திமுக மட்டுமே பாதுகாப்பு அளிப்பது போன்ற போலி பிம்பத்தை கட்டமைக்கின்றனர். உண்மையில் சிறுபான்மை மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்டது அதிமுக அரசு தான்” என அவர் தெரிவித்தார்.