திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திமுக வேட்பளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நேற்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
திண்டுக்கல் சீனிவாசன் ஒரு காமெடி அமைச்சர்
அப்போது பேசிய அவர், "திண்டுக்கல் சீனிவாசன் ஒரு காமெடி அமைச்சர். அவரால் நாட்டுக்கு இரண்டு உண்மை வெளிவந்தது. முதலாவது உண்மை, ‘அம்மா இட்லி சாப்பிட்டார்கள். அம்மா சட்னி சாப்பிட்டார்கள்’ என்று சொன்னதெல்லாம் பொய் என்பதை அவர்தான் நாட்டிற்கு அம்பலப்படுத்தினார். 'நாங்கள் பொய் சொன்னோம்' என்று பொதுக் கூட்டத்திலேயே அவர் ஒத்துக்கொண்டார்.
இரண்டாவது உண்மை, 'சசிகலா குடும்பம் அம்மாவைப் பயன்படுத்தி கோடி கோடியாகக் கொள்ளை அடித்துவிட்டது' என்று உண்மையைப் போட்டு உடைத்தார். இந்த இரண்டு உண்மையைச் சொன்னதற்காக அவரை நாம் பாராட்டலாம். மற்றபடி இந்தத் தொகுதிக்கும், இந்த மாவட்டத்திற்கும் அவரால் எந்தப் பயனும் இல்லை. இந்த திண்டுக்கல் மாவட்டத்திற்கு எதையும் செய்யாத சீனிவாசனாக விளங்கிக் கொண்டிருப்பவர்தான் இந்த அமைச்சர்.
தோல்வி பயத்தில் முதலமைச்சர்
முதலமைச்சர் பழனிசாமிக்கு இப்போது தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். இப்போது ஊடகங்களில் திமுகதான் ஆட்சிக்கு வரப்போகிறது என்று கருத்துக்கணிப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. தப்பித்தவறிக்கூட அதிமுக ஒரு இடத்தில்கூட வந்துவிடக் கூடாது. இது ஆசை அல்ல; அது ஆபத்து. ஒரு அதிமுக எம்எல்ஏ வெற்றிபெற்றால்கூட அவர் அதிமுக எம்எல்ஏவாக அல்லாமல் பாஜக எம்எல்ஏவாகத் தான் செயல்படுவார். அதற்கு உதாரணம், ஓபிஎஸ் மகன்.
பெண்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் பேசுவதா
தாராபுரம் வந்த பிரதமர் மோடி அங்கு வந்து வெறும் பொய்யைப் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். அதாவது திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். தாராபுரம் பக்கத்தில்தான் இருக்கிறது பொள்ளாச்சி. அந்தப் பொள்ளாச்சியில் நடந்த சம்பவம் அவருக்குத் தெரியாதா? சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியது காவல் துறை. அந்தக் காவல் துறையில் இருக்கும் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை. ஒரு பெண் எஸ்.பி.க்கே பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்கள். அவர் வேறு யாரும் அல்ல, அதே காவல் துறையில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சிறப்பு டிஜிபி.
காதில் பூச்சுற்றும் அதிமுக
மேலும், பன்னீர்செல்வம் – பழனிசாமி இருவரையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு ஊழலை ஒழிக்கப்போகிறோம் என்று பிரதமர் மோடி பேசுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது. இப்போது நடக்கின்ற ஆட்சியைப் பொறுத்தவரையில் ஒரு கோமாளித்தனமான, கரப்ஷன் - கமிஷன் – கலெக்ஷன் நிறைந்திருக்கும் ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது.
நான் கேட்கிறேன் 2011 தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள், 2016 தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள், அவற்றில் ஏதாவது உங்கள் வீடு தேடி வந்ததா? ஆனால் இப்போது புதிதாக வாக்குறுதிகளை வழங்கி அவையெல்லாம் வீடு தேடி வரும் என்று நம் காதில் பூச்சுற்ற ஆரம்பித்து இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
கேபிள் ராதாகிருஷ்ணன்
தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அவர், "உடுமலை ராதாகிருஷ்ணனை கேபிள் ராதாகிருஷ்ணன் என்று சொன்னால்தான் அனைவருக்கும் தெரியும். ஏனென்றால் கேபிள் ஆபரேட்டராக இருந்தவர்.
அமைச்சர் ஆனதற்குப் பிறகு அவருக்கு எவ்வளவு சொத்து சேர்ந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாதது அல்ல. அதுமட்டுமல்ல, கேபிள் கார்ப்பரேஷனின் சேர்மனாகவும் இருக்கிறார். இவர்தான் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் 70 ரூபாய்க்கு கேபிள் கொடுப்போம் என்று சொன்னார். அவ்வாறு செய்தார்களா?
அவரைப்போல, கேபிள் கார்ப்பரேஷன் அமைச்சர் போலச் செயல்படும் ஒருவர் இருக்கிறார். அவர்தான் முதலமைச்சரின் சிறப்பு அலுவலர் எழில். அவர்களின் வேலையே டி.வி. சேனல்களை, பேப்பர் ஊடகங்களை மிரட்டுவதுதான். பிரதமர் மோடி கொங்கு வட்டாரத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசி இருக்கிறார்.
ஏழு வருடங்களாகப் பிரதமராக இருக்கிறீர்களே! அவர்களுக்கு என்ன செய்தீர்கள்? அதைப் பட்டியல் போட்டுச் சொல்லும் அருகதை, யோக்கியதை உங்களுக்கு இருக்கிறதா? உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, உபத்திரவம் செய்யாமல் இருக்க வேண்டும் அல்லவா" என்று தெரிவித்தார்.