திண்டுக்கல்: தமிழகத்தில் நடைபெற்ற மணல் குவாரி முறைகேடு தொடர்பாக திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினம் மற்றும் அவருடைய மைத்துனர் கோவிந்தன் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அமலாக்கத் துறையினர், ரத்தினம் வீட்டில் 31 மணி நேரம் சோதனையிட்டதாகக் கூறப்படுகிறது. சோதனையின்போது ரத்தினம் வீட்டில் ரத்தினத்தின் மூத்த மகன் துரைராஜ் மற்றும் அவருடைய மனைவி மற்றும் இளைய மகன் வெங்கடேஷ் மற்றும் ரத்தினத்தின் தாயார் ஆகியோர் இருந்தனர்.
மேலும், சோதனையின்போது வங்கி அதிகாரிகள் மற்றும் நகை மதிப்பீட்டாளர்கள் நகை எடை இயந்திரமுடன் வீட்டிற்குள் சென்று, வீட்டிலிருந்த நகைகளை எடை போட்டு மதிப்பீடு செய்தனர். தொடர்ந்து 31 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில், தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் இருந்து முக்கியமான ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில், இன்று (நவ.25) தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் அமலாக்கத்துறை இரண்டாவது கட்டமாக சோதனை நடத்தினர். காலை 10 மணிக்கு தொடங்கி, சோதனை 3 மணி நேரமாக நடைபெற்றது. தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் சோதனையை முடித்துவிட்டு புறப்பட்டுச் சென்றனர்.
இந்த சோதனையின்போது தொழிலதிபர் ரத்தினம் மற்றும் அவரது இரண்டு மகன்களும் வீட்டில் இல்லாத நிலையில், தொழிலதிபர் ரத்தினத்தின் மனைவி செல்வி மட்டும் வீட்டிலிருந்தாக கூறப்படுகிறது. அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை குறித்த விளக்கங்களை கூறியதோடு, முக்கிய சில ஆவணங்களில் கையெழுத்து பெற்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட மகா தீப கொப்பரை