திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை அருகே சரளைபட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (35). இவர் தனியார் பேருந்தில் கிளீனராக வேலை செய்து வருகிறார். இவர் குடித்துவிட்டு ஊருக்குள் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு செந்துறை மதுபானக் கடையில் முருகேசனுக்கு அவரது நண்பர்களுடன் தகராறு ஏற்பட்டது. அப்போது அவர்களுக்கு இடையே நடந்த வாய்த் தகராறில் அவருடன் வந்த நண்பர் முருகேசனை அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தன்னை அடித்தவரை யாரும் தட்டிகேட்கவில்லை, எனக்கு அது அவமானமாக இருப்பதால் நான் செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்யப்போகிறேன் என்று மிரட்டல் விடுத்து, சுமார் 150 அடி உயரமுள்ள செல்போன் டவரில் 100 அடி உயரம் வரை ஏறியுள்ளார்.
பின்னர் அவர் தனது சட்டையை கழட்டி கீழே எறிந்துள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாகி கூட்டம் சேர்ந்தது. சிறிது நேரம் கழித்து தகவலறிந்து நத்தம் தீயணைப்புத் துறையினர் அங்கு வந்தனர். செல்போன் டவரில் ஏறிய முருகேசனை பத்திரமாக கீழே அழைத்து வந்தனர்.
சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பின் கீழே இறங்கிய முருகேசனை போலீசார் நத்தம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.