திண்டுக்கல் பேகம்பூரைச் சேர்ந்தவர் சரவணன். இவர் பேகம்பூர், மேட்டுப்பட்டி, பாரதிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் ரூ. 50 ஆயிரத்தில் இருந்து ரூ. 5 லட்சம் வரை ஏலச்சீட்டும், தீபாவளி சீட்டு என வாரம் ரூபாய் ஐந்நூறு, ஆயிரம் என கடந்த ஒரு வருடமாக மக்களிடம் வசூல் செய்துள்ளார். இதேபோல் கூடுதலாக வட்டி தருவதாகக் கூறி பலரிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் வாங்கியுள்ளார்.
இந்நிலையில், ஏலச்சீட்டில் பணம் கொடுத்தவர்களுக்கு பணம் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். மறுபுறம் சென்ற தீபாவளிக்கு சீட்டு கட்டியவர்களுக்கும் தற்போதுவரை பணம், பொருட்களை தராமல் ஏமாற்றிவந்திருக்கிறார். இதனிடையே பாதிக்கப்பட்ட நபர்கள் சரவணனை அணுகி தங்களது பணம் குறித்து கேட்டபோது பணம் தராமல் காலதாமதம் செய்துள்ளார்.
இதனால் சரவணன் கடந்த பத்து தினங்களாக வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டார். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தங்களைப் போல் 400க்கும் மேற்பட்டோரிடம் சரவணன் இரண்டு கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்துள்ளதாகக் கூறி புகார் அளித்தனர். இது தொடர்பாக விரைந்து விசாரணை செய்யும்படி கோரிக்கையும் வைத்தனர்.