திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி காவல் நிலையத்தில் காவல் துணை ஆய்வாளராக பணிபுரிபவர் வாசு(52). இவர் கடந்த இரு தினங்களுக்கு முன் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, நத்தம் கல்வேலிபட்டியைச் சேர்ந்த பாலமுருகன் (32) என்பவர், சாணார்பட்டி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது காவல் துணை ஆய்வாளர் வாசு அவரது வாகனத்தைப் பறிமுதல் செய்து, ரூபாய் 2 ஆயிரத்தை லஞ்சமாக கேட்டுள்ளார்.
மேலும் அப்பணத்தினை அருகில் உள்ள மருந்து கடையில் கொடுத்துவிட்டு, தனக்கு தொலைபேசி வாயிலாகத் தகவல் தெரிவிக்குமாறு கூறியுள்ளார். அதன்படி, லஞ்சமாக பணத்தைக் கொடுத்து விட்டு, தகவல் தெரிவித்துள்ளார், பாலமுருகன். பின் தனது செல்போனில் பதிவான ஆடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முத்துச்சாமி விசாரணை செய்ய உத்தரவிட்டார். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா இவ்விசாரணையை முடித்து அறிக்கையை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்குப் பரிந்துரை செய்தார்.
இதனை அடுத்து காவல் துணை ஆய்வாளர் வாசுவை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முத்துச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் சிறையில் அடைப்பு!