திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் சாகர் அணைக்கு வரும் பெரியாறு வரத்துக்கால்வாயிலிருந்து ராஜவாய்க்கால் பாசனப் பகுதியில் சுமார் 16 கண்மாய்களும், குடகனாற்றுக் கால்வாய் பாசனப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கண்மாய்களும் உள்ளன.
இப்பகுதியில் நீண்டநாள்களாகத் தண்ணீர் பிரச்னை இருந்துவந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் போராட்டம் நடத்தி ஐந்து நாள்களுக்கு ஒருமுறை இருதரப்பும் தண்ணீர் பங்கீட்டுக்கொள்ள அரசு தரப்பில் முடிவுசெய்யப்பட்டது.
அதன்படி, இரண்டு முறை தண்ணீர் முறையாகத் திறக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று குடகனாற்றுக் கால்வாய் விவசாயிகளுக்கு மூன்றாவது முறையாக தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் திறக்கப்படவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த குடகனாற்று விவசாயிகள் தாங்களே களத்தில் இறங்கி மதகிலிருந்து தண்ணீர் திறந்தனர். இதனை அறிந்த ராஜகால்வாய் விவசாயிகள் தண்ணீர் வரும் பாதையை வழிமறித்து அடைத்து குடகனாற்று விவசாயிகளைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இது குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.
தற்போது இருபுறமும் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் குவிந்துள்ளனர். இதனால் எப்போது வேண்டுமானாலும் இருதரப்பினருக்குமிடையே கைகலப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: