திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் லோகேஸ்வரன் (17). இவர் திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று (ஏப்.24) லோகேஸ்வரனும், அவரது நண்பர்கள் ஐந்து பேரும் நண்பனின் பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டு, திண்டுக்கல் - கரூர் சாலையில் எல்.எஸ். நகர் பகுதியில் சுகுமாரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.
அதன் பின்னர், அனைவரும் அருகில் இருந்த கிணற்றில் குளித்துள்ளனர். இதில் அனைவரும் குளித்துவிட்டு கிணற்று கரைக்கு மேலே வர, லோகேஸ்வரன் மட்டும் கிணற்றை விட்டு வெளியே வரவில்லை. சக நண்பர்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் உதவி கேட்டுள்ளனர். பொதுமக்கள் தேடிப்பார்த்தும் லோகேஸ்வரன் கிடைக்காததால் காவல் துறைகக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றுக்குள் தேடி பார்த்தனர். நேற்று மாலை 3 மணி முதல் இரவு முழுவதும் தேடிய நிலையில் லோகேஸ்வரனின் உடலை மீட்க முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து மின்மோட்டார் கொண்டு கிணற்றிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சுமார் பத்து மணி நேர போராட்டத்திற்கு பிறகு இன்று (ஏப்.25) காலை லோகேஸ்வரன் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து லோகேஸ்வரன் உடலை உடற்கூராய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். இது குறித்து தாடிக்கொம்பு காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி - பிரதமர் மோடி உறுதி