திண்டுக்கல மாரியம்மன் கோயில் கலையரங்கத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பு பொங்கல் பரிசு வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கிவைத்தார். இதில் முதல் கட்டமாக 500 பயனாளர்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி பங்கேற்றார்.
இதனையடுத்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”ஒன்றியக் கவுன்சில்களின் 5 ஆயிரத்து 900 இடங்களில், அதிமுக 2 ஆயிரத்து 163 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 511 ஊராட்சிப் பதவிகளுக்கு அதிமுக 230 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஏற்கெனவே 38 எம்.பி.தொகுதிகளில் வெற்றிபெற்ற திமுக, வாக்குகளில் 50 சதவீதம் குறைந்துள்ளது. அதனடிப்படையில் கணக்கு பார்த்தால் எங்களின் முன்னேற்றம் சரியாக தெரியும்.” என்றார்.
அதிமுகவை சார்ந்த எம்பி அன்வர்ராஜா, 'பாஜகவோடு கூட்டணி வைத்ததால்தான் தோல்வி அடைந்து வருகிறோம்' என்று சொல்லியிருக்கிறாரே? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அது அவரது கருத்து. முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் குடியுரிமை சட்டத்திற்கு ஏன் வாக்களித்தோம் என்று தெளிவாக சொல்லியுள்ளார்கள். அதுதான் எங்கள் கட்சியின் கருத்தாகும் என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: அன்வர் ராஜாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ்