திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர் தாலுகா நாகையன்கோட்டையைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் வேளாண் துறையில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு கடந்த பத்து ஆண்டுகளாக சினிமா துறையில் சாதிக்கவேண்டும் என்ற ஆர்வத்துடன் பயணித்து வருகிறார். பல குறும்படங்களையும் இவர் இயக்கி வருகிறார்.
இந்நிலையில், ஹாலிவுட் படங்கள் பாணியில் தமிழ்ப்படங்களையும் எடுக்க வேண்டும் என எண்ணிய கார்த்திக், 'தர்மன்' என்னும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட குறும்படத்தை இயக்கியுள்ளார்.
இந்தக் குறும்படத்தில் சாதாரண கூலித் தொழிலாளிகள், திரைத்துறையில் நடிக்க ஆர்வம் உள்ள புது முகங்கள், நண்பர்கள் ஆகியோரை கார்த்திக் நடிக்க வைத்துள்ளார்.
'தர்மன்' படத்தின் வேலைகள் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட் ஒரு லட்சம் ரூபாய் எனவும் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
'தர்மன்' படத்தின் ட்ரெய்லரை தற்போது 'ஒன்மேன் கிரியேஷன்' என்ற யூடியூப் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
'தர்மன்' படம் குறித்து கார்த்திக் கூறுகையில், ”படத்தைப் பார்த்து ஏராளமானோர் என்னை அழைத்து வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இயற்கைச் சீற்றம், திகில் கலந்த கதையுடன் 'தர்மன்' எடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லை மையமாக வைத்து லட்சியப் பயணமாக சினிமாத்துறையில் ஆர்வத்தோடும், மிகுந்த ஈடுபாடுடனும், வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் நபர்களை வைத்து பல படங்களை இயக்க வேண்டும் என்பதே என் கனவாக உள்ளது” என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: HBD விஜயகாந்த் - யாரையும் மூழ்கடிக்காத கேப்டன்