திண்டுக்கல் மாவட்டம் நந்தனார்புரம் கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்ப்பு திட்டத்தின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
அப்போது பேசிய அமைச்சர் சீனிவாசன், இளைஞர்கள் நிறைய பேர் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கிறார்கள், அமைச்சரிடம் சொன்னால் வேலை கிடைக்கும் என்று கூறுகின்றனர். நான் சொல்வது என்னவென்றால் உடனே படித்த பிள்ளைகளுக்கு வேலை கிடைக்க தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் தேர்வு இருக்கிறது. இதன் மூலம் படித்த மாணவர்கள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுவிட்டால் யார் தயவும் தேவையில்லை. ஒரு பைசா லஞ்சம் கொடுக்காமல் நீங்கள் எழுதிய எழுத்தின் மூலமாக கற்ற கல்வியின் மூலமாக உங்கள் வீடு தேடி அந்த வேலை வரும் என்று தெரிவித்தார்.
இதனிடையே, அமைச்சர் சீனிவாசன், தமிழ்நாடு தேர்வாணையம் என்பதற்கு பதிலாக தமிழ்நாடு சிவில் சர்வீஸ் என உளறியது சலசலப்பை ஏற்படுத்தியது.
சமீபத்தில் வாஜ்பாய் நல்ல பட்ஜெட்டை அறிவித்துள்ளார் என்று கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதேபோன்று தற்போது சிவில் சர்வீஸ் என்று கூறியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மேடை பேச்சுக்கள் சர்ச்சைகளாக தொடர்ந்து கொண்டே இருப்பது அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.