திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், அனுமந்தராயன் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவருக்கு கடந்த 2009ஆம் ஆண்டு அருள் செல்வி என்ற பெண்ணுடன் திருமணமான நிலையில், பல வருடங்களாக குழந்தை இல்லாமல் தவித்து வந்ததாகவும், பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் எதுவும் நடக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனிடையே, கடந்த 2020ஆம் ஆண்டு திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே திருவள்ளுவர் சாலையில் செயல்பட்டு வந்த பவானி கணேசன் மருத்துவமனையில் மருத்துவர் பவானியை அணுகியுள்ளனர். அப்போது அருள் செல்வியை பரிசோதித்த மருத்துவர் பவானி கணேசன், அவருக்கு கர்ப்பப்பை சுருங்கியுள்ளதாகவும், இதனால் குழந்தைப் பிறப்பது கடினம் எனவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, தன்னிடம் பிறந்து சில மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று உள்ளதாகவும், ரூ.2 லட்சம் கொடுத்தால் குழந்தையை விற்பனைக்கு தருவதாகவும் கூறியுள்ளார். அதற்கு ஏதேனும், சட்டப்பிரச்னைகள் வரும் என பால்ராஜ் பயந்ததாகவும், எந்த பிரச்னை வந்தாலும் தான் பார்த்துக்கொள்வதாகவும் மருத்துவர் பவானி கணேசன் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, மருத்துவரின் பேச்சை நம்பிய பால்ராஜ் தம்பதியினர் ரூ.2 லட்சம் கொடுத்து அந்த ஆண் குழந்தையை வாங்கிச் சென்றதாகவும், கடந்த 3 வருடங்களாக தங்களது சொந்த குழந்தை போல், நல்ல முறையில் வளர்ப்பதாகவும் கூறுகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியாக உள்ள சிவக்குமாருக்கு, சட்ட விதிகளுக்கு புறம்பாக ஆண் குழந்தையை விலைக்கு வாங்கி, வளர்த்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலையடுத்து, அடிப்படையில் அனுமந்தராயன் கோட்டை சென்ற குழந்தைகள் நல அலுவலர் சிவக்குமார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்துள்ளார். அந்த விசாரணையில், கிடைத்த தகவல் உண்மை என தெரியவந்துள்ளது. இதையடுத்து பால்ராஜ் தம்பதியினரை திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி, குழந்தையை திருப்பி தரும்படி தெரிவித்துள்ளனர்.
ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், கடந்த 12ஆம் தேதி பால்ராஜ் தம்பதி மற்றும் மருத்துவர் பவானி கணேசன் மீது திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் குழந்தையை ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்ததாக கூறி, புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் இது தொடர்பாக, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே டாக்டர் பவானி கணேசன் மருத்துவமனை நடத்த அரசு அனுமதி பெறாமல் பேருந்து நிலையம் அருகே உள்ள திருவள்ளுவர் சாலையில் பவானி கணேசன் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வந்ததும், மேலும் ஆயுர்வேதா, சித்தா போன்ற மருந்துகளை பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் தெரிய வந்துள்ளது. தற்போது இதுதொடர்பாகவும் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். iதைத்தொடர்ந்து மருத்துவ அதிகாரிகளால் அந்த மருத்துவமனைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வைகுண்ட ஏகாதசி: மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு!