திண்டுக்கல்: நவராத்திரி என்றாலே கொலு பொம்மைகள்தாம் நம் நினவுக்கு வருகிறது. நவராத்தி விழாவில் பெண் தெய்வங்கள் போற்றப்படுகின்றன. இந்த ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி கொலு பொம்மையின் விற்பனை களைகட்டியுள்ளது. குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டத்தில் விற்பனை அமோகமாக நடைபெற்றுவருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் நவராத்திரியை முன்னிட்டு கொலு பொம்மை விற்பனை களைகட்டியுள்ளது. இதையொட்டி வீடுகளில் அடுக்கடுக்கான படிகள் அமைத்து கொலு பொம்மைகள் வைக்கப்படும்.
சூடுபிடித்த கொலு பொம்மை விற்பனை
இந்த பொம்மைகள் வைக்கும் படிகள் ஆண்டுக்காண்டு அதிகரிக்கப்படும், அதற்கேற்றாற்போல் பொம்மைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். கொலுவுக்குப் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. அவை 40 முதல் மூன்றாயிரம் ரூபாய் வரை விற்கப்படுகின்றன. திண்டுக்கல் மாவட்டம் நொச்சி ஓடைப்பட்டியில் இந்த ஆண்டு
- கிரிக்கெட்
- கள்ளழகர்
- கேரம்
- கும்பகர்ணன்
- சிறைச்சாலை
- மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்
- ஜல்லிக்கட்டு
- அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்
- தசாவதாரம்
- ஹரே ராமா பஜனை செட்
- விளக்கு பூஜை
உள்ளிட்ட பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இங்கிருந்து தமிழ்நாடு மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்குச் செல்கின்றன. அக்டோபர் 7ஆம் தேதி நவராத்திரி விழா தொடங்குவதால் கொலு பொம்மை விற்பனை தற்பொழுது சூடுபிடித்துள்ளது.
50-க்கும் மேற்பட்ட மாடல்களில் பொம்மைகள்
பண்டிகை நாள் நெருங்கிவருவதால் பொதுமக்கள் ஆர்வமுடன் பொம்மைகளை வாங்கிச் செல்கின்றனர். இது குறித்து நொச்சி ஓடைப்பட்டி பகுதியைச் சேர்ந்த மண் பொம்மை தயாரிப்பாளர் கஜேந்திரன் கூறுகையில், "நாங்கள் சீசனுக்கு ஏற்றாற்போல் மாடல்களில் களிமண் கொண்டு பொம்மைகள் செய்துவருகிறோம்.
வருகின்ற சிவராத்திரியை முன்னிட்டு கொலு பொம்மைகளைத் தயாரிக்கும் பணியில் கடந்த மூன்று மாதங்களாக ஈடுபட்டுவந்தோம். கடந்தாண்டு கரோனா கட்டுப்பாடால் கொலு பொம்மை விற்பனை பாதித்தது, இந்தாண்டு நிலைமை மாறியுள்ளது.
தசாவதாரம், கிரிக்கெட் செட், கும்பகர்ணன், மீனாட்சி திருக்கல்யாணம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மாடல்களில் பொம்மைகள் விற்பனைக்காக வைத்துள்ளோம். இன்னும் சில நாள்களே இருப்பதால் விற்பனை ஜோராக நடக்கிறது" என்றார்.
இதையும் படிங்க: மாநிலங்களவையில் சராசரி வருகைப்பதிவேடு 78% - ஆய்வில் தகவல்