திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள செந்துறை குரும்பப்பட்டியைச் சேர்ந்தவர் அடைக்கலம். இவரது மகன் ஆரோக்கியராஜ்(43). இவருக்கு திருமணமாகி புஷ்பா என்ற மனைவியும், சந்தோஷ்(9), செபில்(6) ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஆரோக்கியராஜ் ஜவுளி வியாபாரத்திற்காக கர்நாடகா சென்றார். தொடர்ந்து கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள கங்காவதி பகுதியில் தங்கி வியாபாரம் செய்துவந்தார்.
இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதால் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் நண்பர்களுடன் வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.
இதனிடையே இன்று காலை நெஞ்சு வலியால் துடித்த ஆரோக்கியராஜை அவரது நண்பர்கள் கங்காவதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவலறிந்த ஆரோக்கியராஜின் உறவினர்கள், கிராம மக்கள் அவரது உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மியான்மருக்கு சுற்றுலா சென்றவர் உயிரிழப்பு: காணொலி காட்சி மூலம் இறுதி சடங்கு!