திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் சுரேஷ் பாபு என்பவரிடம் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஊழல் தடுப்பு காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளனர்.
மருத்துவர் சுரேஷ் பாபு வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கு அமலாக்கத்துறை வசம் ஒப்படைக்கப்படுவதாகக் கூறிய அங்கித் திவாரி, வழக்கிலிருந்து அவரை காப்பாற்றுவதாகக் கூறி ரூ.3 கோடி லஞ்சம் கேட்டதாகவும், இறுதியாக ரூ.51 லட்சம் எனப் பேரம் பேசப்பட்டு முதல் கட்டமாகக் கடந்த நவம்பர் 1ஆம் தேதி காலை நத்தம் - மதுரை நான்கு வழிச் சாலையில் ரூ. 20 லட்சத்தை என ஓட்டுநர் அமலாக்கத்துறை அதிகாரி காரில் வைத்தார். இது எனது காரில் உள்ள கோமராவில் பதிவாகி உள்ளதாக மருத்துவர் சுரேஷ் பாபு புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும், மீதித் தொகையை நவம்பர் 30 அங்கித் திவாரி மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் வாட்ஸ் அப் கால் மூலம் கேட்டுள்ளார். இதனையடுத்து மருத்துவர் சுரேஷ் பாபு லஞ்சம் தர விருப்பம் இல்லாததால் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையிடம் புகார் அளித்ததாகவும்." அந்த முதல் தகவல் அறிக்கையில் (FIR) கூறப்பட்டுள்ளது.
மருத்துவர் சுரேஸ் பாபு அளித்த புகாரின் பேரில் திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு காவல் துறையினர் நவம்பர் 30ஆம் தேதியே அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மீது 7(a) 1988 ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து, திண்டுக்கல் ஊழல் தடுப்பு காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட அங்கித் திவாரி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு காவல் துறையினர் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி மதுரை உதவி மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதால், அவர் பயன்படுத்திய அறைகளில் சோதனை நடத்த அமலாக்கத்துறையிடம் அனுமதி கோரினர். மேலும் இதைத் தொடர்ந்து மதுரையிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு காவல் துறையினர் சோதனை செய்தனர்.
தமிழ்நாட்டில் முதன்முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஸ்பைடர் மேன் போல் மாடிக்கு மாடி தாவிய கொள்ளையன்.. ஜோஸ் ஆலுக்காஸ் வழக்கில் கோவை துணை ஆணையர் சந்தீஸ் அளித்த பிரேத்யேக தகவல்!