கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதை அடுத்து மாவட்டத்திற்குள் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்குள்ளான பொது போக்குவரத்து செயல்பட தொடங்கியுள்ளது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்ட பேருந்து நிலையத்தில் உள்ள சிறுமலை பேருந்து நிறுத்தம் அருகே பயணிகள் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பேருந்து நிலையத்தின் மேற்கூரை சரசரவென இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அவ்விடத்தில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
முன்னதாக, கடந்த மூன்று தினங்களாக திண்டுக்கல் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் பேருந்து நிலையத்தில் உள்ள மேற்கூரைகளில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் கட்டட மேற்கூரைகளில் தேங்கி விடுகிறது. இதனால் ஈரப்பதத்தின் காரணமாக மேற்கூரைகளில் பல்வேறு இடங்களில் பிளவு ஏற்பட்டு கட்டடம் இடிந்து விழுகிறது.
இது குறித்து பயணிகள் கூறுகையில், "இந்தப் பேருந்து நிலைய பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இதில் ஒருபுறம் புதிய பணிகள் நடைபெற்று வருகிறது. மறுபுறம் பழைய கட்டடமும் உள்ளது. இப்படியான சூழலில் இந்த முழு பேருந்து நிலையப் பணிகள் எப்போது முடியும் என யாருக்கும் தெரியவில்லை.
இதனால் இங்கு வரும் பயணிகள் அனைவரும் வெயில், மழை என எந்த நேரத்திலும் ஒதுங்குவதற்கு கூட இடம் இல்லாமல் பேருந்துகளுக்கு காத்துக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் இனி எப்போது இடிந்து விழும் என தெரியாத சூழலில் பேருந்துக்கு காத்திருப்பது அச்சமடைய வைக்கிறது. எனவே உடனடியாக இந்த பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.
இதையும் பாருங்க: சென்னையில் பயணத்தைத் தொடங்கிய மாநகரப் பேருந்து!