திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கடந்த வியாழக்கிழமையன்று மருந்து விற்பனையாளர் விஜய் என்பவர் தேனி செல்வதற்காக அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது பேருந்து ஓட்டுநருக்கும், விஜய்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, பேருந்துல் இருந்து கீழே இறங்கிய விஜய் மீது அங்கிருந்த அரசு பேருந்து நடத்துநர்கள், ஓட்டுநர்கள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்த விஜய், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக விஜய் கொடுத்த புகாரின் பேரில், அரசு பேருந்து ஓட்டுநர்கள் தினகரன், மணிகண்டன் மற்றும் நடத்துநர் அலெக்ஸ் உட்பட ஏழு பேர் மீது திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், அரசு பேருந்து ஓட்டுநர் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில், விஜய் மீது திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், விஜய் தாக்கப்பட்டதை கண்டித்தும், சம்பந்தப்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை கைது செய்ய வலியுறுத்தியும் 150க்கும் மேற்பட்ட மருந்து விற்பனையாளர்கள் நேற்று இரவு திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்பின்னர், சம்பவ இடம் சென்ற திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர், சமரச பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.