திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் 36ஆவது பட்டமளிப்பு விழா, நாளை (நவ.10) மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த விழாவிற்காக 4,500 போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு இன்று நவ. 10 மாலை விழா நடைபெறும் காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்தார். பின்னர் பாதுகாப்பு குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனைத்தொடர்ந்து பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கத்திற்கு சென்று பார்வையிட்டார். பிரதமர் நரேந்திர மோடி, மதுரை விமான நிலையத்தில் இருந்து விழா நடைபெறும் காந்தி கிராம பல்கலைக்கழகத்திற்கு கார் மூலம் வருகைக்கான ஒத்திகை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் காரணமாக திண்டுக்கல் - மதுரை நான்கு வழிச்சாலையில் மதியம் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரை போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டு, மாற்றுப்பாதையில் வாகனம் செல்ல அனுமதிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மதுரை விமான நிலையத்திலிருந்து மாலை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது எட்டு கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து வந்தன. அணிவகுத்து வந்த கார்கள் விழா நடைபெறும் ஆடிட்டோரியம் வரை சென்றது. இதனைத்தொடர்ந்து மீண்டும் வாகனங்கள் திரும்பி மதுரை விமான நிலையத்திற்குச்சென்றது.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டுக்குள் 540 மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்படும்'