திண்டுக்கல்: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று மீண்டும் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. இதனால், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை தமிழ்நாடு அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. மேலும், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உலகப் புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் முகக்கவசம் அணிந்துள்ளார்களா என கோயில் ஊழியர்கள் சோதனை செய்து வருகின்றனர்.
மேலும் முகக்கவசம் அணியாமல் வரும் பக்தர்களுக்கு அறநிலையத்துறை சார்பில் இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டு, கோயில் மலைமீது பயணிக்க அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அதேநேரம், கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க பக்தர்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும் எனவும் அறநிலையத்துறை சார்பில் தொடர்ந்து அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.
தொடர்ந்து பழனி முருகன் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், கிருமி நாசினிகளைப் பயன்படுத்தவும் கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முதல் நாள் பள்ளிக்குச்சென்ற மாணவன் ஆட்டோ கவிழ்ந்து உயிரிழப்பு - சோகத்தை ஏற்படுத்தும் முழுப்பின்னணி