திண்டுக்கல்: பழனி மலை முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதேபோல உள்ளூர் பக்தர்களும் பழனி மலைக்கோயிலுக்கு தினமும் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இவ்வாறு வரும் உள்ளூர் பக்தர்கள் போகர் சந்நிதி வழியாக சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் விஸ்வரூப தரிசனம் செய்வதற்காக பழனி மலைக்கோயிலுக்கு வழக்கம்போல உள்ளூர் பக்தர்கள் வருகை தந்தனர். வழக்கமாக செல்லும் வழியில் செல்ல முயன்றபோது அந்த வழி மூடப்பட்டிருந்தது.
இதுகுறித்து கோயிலில் பணியில் இருந்த கண்காணிப்பாளரிடம் உள்ளூர் பக்தர்கள் கேட்டபோது அவ்வழியே சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று தெரிவித்தனர். இதனையடுத்து உள்ளூர் பக்தர்கள் திருக்கோயில் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாமி தரிசனம் செய்யவரும் உள்ளூர் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமானதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
அதேவேளையில் வெளியூரில் இருந்து வந்த சில பக்தர்களை கோயில் அலுவலர்கள் உள்ளே அழைத்துச்சென்றதைக் கண்டு கோபமடைந்த உள்ளூர் பக்தர்கள் அலுவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கோயிலில் பணியில் இருந்த கண்காணிப்பளார் மகேந்திரபூபதி என்பவர் பக்தர்களை தாக்க முயன்றதாகக் கூறி உள்ளூர் பக்தர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து பக்தர்கள் போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த இந்து அமைப்பினர் அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பல ஆண்டுகளாக தொடர்ந்து தினமும் சாமி தரிசனம் செய்ய வருவதாகவும்,அவ்வாறு வரும் உள்ளுர் பக்தர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்வதற்காக அனுமதிக்கப்பட்ட வழியை தடுக்கக்கூடாது என்றும்,அவ்வாறு தடுத்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் எச்சரித்தனர்.
இதனையடுத்து தினந்தோறும் கோயிலுக்கு வரும் பக்தர்களைத் தடுக்காமல் சாமி தரிசனம் செய்ய அனுமதிப்பதாக கோயில் நிர்வாகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து பக்தர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். பழனி மலைக்கோயிலில் அதிகாலையிலேயே பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: என்னுடைய ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு தான்' - திண்டுக்கல் சீனிவாசன்