திண்டுக்கல் : பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று(மார்ச் 12) தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வருகிற 17ஆம் தேதியும், திருத்தேரோட்டம் வருகிற 18ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் 2ஆம் நாள் திருவிழாவான இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய குவிந்தனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், இத்துடன் இன்று திருமண முகூர்த்தம் என்பதாலும் பழனி அடிவாரம் மற்றும் நகர்ப்பகுதி முழுவதும் ஏராளமான வாகனங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
மேலும் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், தீர்த்தக்காவடி எடுத்துவந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
படிப்பாதை, மின்இழுவை ரயில், ரோப் கார் ஆகியவை மூலம் மலைக்கோயில் சென்ற பக்தர்கள் சுமார் 5மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான வாகனங்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆகியவற்றால் பலமணிநேரத்திற்குப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க : சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகல தொடக்கம்!