திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே உள்ள தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று, அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியை தேர்வு செய்து, அவரை இரவு முழுவதும் நிலா பெண் அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டில் அந்த ஊரைச் சேர்ந்த கார்த்திகேயன் - மேகலா தம்பதியின் மகள் சர்வ அதிர்ஷ்டா (10) என்பவர் நிலா பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவரை அங்குள்ள மாடச்சி அம்மன் கோயிலில் இருந்து தாரை - தப்பட்டை முழங்க, சரளை மேடுக்கு கிராமப் பெண்கள் அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு ஆவாரம் பூ மாலையிட்டு, ஆவாரம் பூக்கள் அடங்கிய கூடையை தலையில் வைத்து, மாரியம்மன் கோயில் முன்பு அமர வைத்தனர். பின்னர் பெண்கள் பாட்டுப் பாடி கும்மியடித்து மகிழ்ந்தனர்.
தொடர்ந்து அதிகாலையில் நிலா மறையத் தொடங்கும் நேரத்தில், சிறுமி கொண்டு வந்த ஆவாரம் பூ கூடையில் தீபச் சட்டியை வைத்து, தீபம் ஏற்றி அதனை நீர் நிறைந்த கிணற்றில் மிதக்க விட்டனர். இதனையடுத்து திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.
இதையும் படிங்க: திருவள்ளுவருக்கு கோயில்..! ஊர்வலமாக சென்று மக்கள் கொண்டாட்டம்!