திண்டுக்கல் அருகே உள்ள பள்ளப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான போட்டிக்கு காளிதாஸ் என்பவர் கிணறு சின்னத்தில் போட்டியிட்டார். அதன்படி முதல்கட்டமாக 27ஆம் தேதி நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பள்ளப்பட்டி ஊராட்சியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில் பள்ளப்பட்டி ஊராட்சித் தலைவராக காளிதாஸ் வெற்றிபெற்றதாக நேற்று நள்ளிரவு அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான சான்றிதழ் வழங்கப்படவில்லை. சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதம் குறித்து காளிதாஸ் தேர்தல் அலுவலரிடம் கேட்டபோது, 'இயந்திரக் கோளாறு!' எனத் தெரிவித்தாகவும் மேலும் காளிதாசை எதிர்த்துப் போட்டியிட்ட பரமன் என்பவர் வெற்றிபெற்றதாக அலுவலர்கள் அறிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த பள்ளப்பட்டி கிராம மக்கள் வாக்கு எண்ணிக்கை மையமான எம்.பி.எம். கல்லூரி வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் அவர்களை சமாதானம் செய்ய முற்பட்டபோதும் அவர்கள் தங்கள் ஊராட்சி மன்றத் தலைவர் காளிதாஸ் என்று கூறி முழக்கமிட்டனர்.
இதையடுத்து காளிதாஸ் நேரில்வந்து கிராம மக்களை சமாதானப்படுத்தினார். அதன்பின்னர் பள்ளப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவருக்கான வாக்குகள் மறுமுறை எண்ணப்பட்டுவருகின்றன.