சாகித்ய அகாதமி விருது பெற்ற 'தோல்' நாவலாசிரியர் செல்வராஜ் உடல்நலக் குறைவு காரணமாக நேற்றிரவு காலமானார். திருநெல்வேலி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவர், பல ஆண்டுகளாக திண்டுக்கல் பகுதியில் வசித்துவருகிறார்.
சிறு வயது முதலே கம்யூனிசத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். இவரது தோல், தேனீர், பொய்க்கால் குதிரை, மலரும் சருகும் போன்ற புகழ்பெற்ற நாவல்களில் சமூகத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்வை மிக இயல்பாக பதிவு செய்திருந்தார்.
இவரது உடலுக்கு எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் மரியாதை செலுத்திவருகின்றனர். இதனிடையே மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுத்தாளர் செல்வராஜின் உடலுக்கு நேரில் மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நவீன இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலையும், சமூகத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்வையும் பதிவு செய்த முற்போக்கு எழுத்தாளர் செல்வராஜ். தனது படைப்புகளின் மூலம் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர்.
உண்மையில் செல்வராஜ் மறைந்தாலும் அவரது எழுத்துக்கள் தமிழ் வரலாற்றில் என்றென்றும் தாக்கத்தை ஏற்படுத்தும். அவரது எழுத்தை கொண்டாடுவதன் மூலம் அவரது நினைவைப் போற்றுவோம்" என்றார்.
இதையும் படிங்க: வீட்டிற்கு அனுப்ப பணமில்லை... கஞ்சா விற்பனையை கையிலெடுத்த மூவர் கைது!