இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில அளவிலான அரசியல், அமைப்பு நிலை பயிலரங்கம் பழனியருகே உள்ள தொப்பம்பட்டியில் இன்று தொடங்கியது. ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா, தேசிய குழு உறுப்பினர்கள் தா.பாண்டியன், நல்லகண்ணு உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்று பேசினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், "இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு சாதாரண மக்களுக்கு எதிராகவும், பெரு முதலாளிகளுக்கு ஆதரவாகவும் மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையே காரணம்.
மத்திய அரசு ரயில் சேவையையும், தமிழ்நாடு அரசு மின்சார பேருந்துகளையும் தனியார் மயமாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. மத்திய மாநில அரசுகளின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. மேலும், இதன்மூலம் பொதுமக்கள், தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சரின் கட்டுப்பாட்டிலுள்ள காவல்துறைக்கு தேவையான தகவல் தொடர்பு சாதனங்களை 350 கோடி ரூபாய் அளவில் கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது. இதனைப்பற்றி எடப்பாடி பழனிச்சாமி சிறிதும் கவலையோ, வெட்கமோ படாமல் இருப்பது வேதனையளிக்கிறது.
அரசின் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் மற்றும் அரசை வழிநடத்தும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் ஆகியோரின் ஆதரவோடுதான் இந்த ஊழல் நடைபெற்றிருக்கிறது. இதில் உடனடியாக அரசு கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும், நீட் நுழைவுத்தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்திருப்பதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இதற்கு சிபிஐ விசாரணை தேவை " என்றார்.
இதையும் படிங்க: 'வன்னியர்கள் ஒன்றும் அப்பாவி திமுக தொண்டர்கள் அல்ல' - ராமதாஸ் காட்டமான அறிக்கை