திண்டுக்கல்: தனியார் கல்லூரியில் பயிலும் மூன்று மாணவியர் தாங்கள் பயிலும் கல்லூரியின் தாளாளர் மீது திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தனர்.
அவர்களது புகாரின் அடிப்படையில் தாளாளர் மற்றும் விடுதிக்காப்பாளர் மீதும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து விடுதிக் காப்பாளர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கல்லூரி தாளாளர் தலைமறைவானார். அவரைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இதையடுத்து தேடப்பட்டு வந்த தாளாளர் கடந்த 23ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் அவர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் உள்ள விரைவு மகளிர் நீதிமன்றத்தில் கடந்த 26ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது தாளாளரிடம் விசாரணை நடத்த தாடிக்கொம்பு காவல் துறையினர் மனு தாக்கல் செய்தனர். இதனால் மூன்று நாள்கள் காவல் துறையினர் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
விசாரணை முடிந்த நிலையில், இன்று (29.11.2021) கல்லூரி தாளாளர் மீண்டும் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி புருஷோத்தமன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் டிசம்பர் மாதம் 10ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்
இதையடுத்து பலத்த பாதுகாப்போடு அழைத்துச் செல்லப்பட்ட தாளாளர் திண்டுக்கல் பழனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க:பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லூரி தாளாளர் - கைது செய்யக்கோரி மாணவிகள் ஆர்ப்பாட்டம்