திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அடுத்த எல்லபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகமுத்துகுமார். இவருக்கு நித்யா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், நித்தியாவுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த பிரபுகுமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
நாளடைவில் இந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாகத் தெரிகிறது. இதனையறிந்த நித்யாவின் கணவர் நாகமுத்துக்குமார், இருவரையும் கண்டித்ததாக அறியமுடிகிறது. இருப்பினும், நித்யாவுடனான உறவை பிரபுகுமார் தொடர்ந்துவந்ததால், கடும் கோபம் அடைந்த நாகமுத்துக்குமார் கடந்த வாரம் பிரபுகுமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அங்குவந்த நித்யாவின் தாய் மாமன் முருகேசன் என்பவர் பிரபுகுமாரை கடுமையான வார்த்தைகளைக் கூறி கண்டித்துள்ளார். இந்த சம்பவத்தால் மனமுடைந்த பிரபுக்குமார், கடந்த 2 நாள்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். பிரபுகுமாரின் மரணத்தால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், இன்று(டிச.1) அதிகாலை நித்தியாவின் உறவினர் முருகேசன் வீட்டின் ஜன்னலிலும், இருசக்கர வாகனத்திலும் நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தப்பியோடினர்.
இத்தாக்குதல் சம்பவத்தில், விவசாயி முருகேசன் வீட்டின் ஜன்னல் பகுதி சேதமடைந்த நிலையில், மற்றொரு நாட்டு வெடிகுண்டு வெடிக்காததால் முருகேசன் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து சாணார்பட்டி காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலறிந்து தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திற்கு கைரேகை நிபுணர்களுடன் விரைந்துவந்த காவல்துறையினர், தடயங்களை சேகரித்தனர். நாட்டு வெடிகுண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க : ஸ்ரீவைகுண்டம் அருகே கார் - சரக்கு வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிறுமி உயிரிழப்பு!