கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கரோனா தொற்றின் பரவலை தடுக்க முடியும் என்பதால் மக்கள் அனைவரும் கண்டிப்பாக தங்களது வீட்டினுள்ளேயே இருக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அச்சமயம் அரசு அலுவலர்கள் தொடர்ந்து கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒன்றிய அலுவலர்கள் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையிலும் தீவிரமாக களமிறங்கி கிராமங்களில் உள்ள தெருக்கள் முழுவதும் வீடு வீடாகச் சென்று கிருமிநாசினி மருந்துகளான பிளிச்சிங் பவுடர் தெளித்து வருகிறார்கள்.
இப்பணிகளை கிராம செயலாளர்கள் உடன் இணைந்து தூய்மை காவலர்கள் களமிறங்கி வீடுகள் மட்டுமின்றி சாவடிகள், கலையரங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் தூய்மையை உறுதி செய்து வருகிறார்கள். வத்தலகுண்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவேண்டும் என்ற நோக்கில் இவ்வாறு தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். மேலும் அலுவலர்களின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.