திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் தனது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதுவதற்காக நேற்று (ஜூன் 3) சென்னையிலிருந்து இ-பாஸ் மூலம் கொடைக்கானல் நகருக்கு வந்துள்ளார்.
அப்போது திண்டுக்கல் மாவட்ட நுழைவாயில் பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் கரோனா பரிசோதனை செய்து கொடைக்கானலுக்கு அனுப்பினர். இந்நிலையில், அந்த மாணவிக்கு இன்று (ஜூன் 4) அதிகாலை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து மருத்துவர்கள், சுகாதாரத் துறையினர், காவல் துறையினர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மாணவியை பாதுகாப்பு உபகரணங்களோடு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
இதனையடுத்து மாணவி தங்கியிருந்த ஆனந்தகிரி 7ஆவது தெரு உள்ளிட்ட அப்பகுதியைச் சுற்றிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அப்பகுதியைவிட்டு யாரும் வெளியே வர வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு அரசு அலுவலர்கள் அறிவுறுத்தி, அப்பகுதியை தீவிர கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.