திண்டுக்கல் மாவட்டத்தில், கரோனா தொற்று டீசல் விலை போல ஏறிக்கொண்டே போகிறது. இதுவரை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 622 பேருக்கு கரோனா பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கரோனா தொற்று அதிகரிப்பின் விளைவாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, காமராஜர் பேருந்து நிலையம், பழனி சாலை ஆரம்ப சுகாதார நிலையம், ஆர்.வி.எஸ்.கல்லூரி, நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி, பழனி அரசு பாலமுருகன் தொழில்நுட்பக் கல்லூரி, ஏ.பி.ஏ. கல்லூரி, உள்ளிட்ட இடங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக இருந்து வரும் கொடைக்கானலுக்கு வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் வருகின்றனர். இதன் மூலம் கரோனா தொற்று பரவும் வாய்ப்புள்ளதால் சோதனைச் சாவடிகளில் சுகாதாரத்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஏதுவாக கொடைக்கானல் பகுதிகளில் நடமாடும் வாகனங்கள் மூலம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
குறிப்பாக, வெளி மாவட்டங்களுக்குச் சென்று வரும் நபர்களுக்கும், சரக்கு மற்றும் காய்கறி வாகனங்களில் சென்று வருபவர்களுக்கும் கரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது. மேலும், வெளி மாவட்டங்களுக்குச் சென்று தங்கி வருபவர்கள் 14 நாட்களுக்குத் தனிமைபடுத்தப்படுவார்கள் என சுகாதாரத் துறையினர் கூறியுள்ளனர்.