கடந்த ஒரு வாரமாக திண்டுக்கல்லில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மாவட்டத்தில் ஒரே நாளில் 94 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 601 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், ஆறு பேர் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நிலையில் திண்டுக்கல் காவேரி நகர் பகுதியைச் சேர்ந்த 59 வயது ஆண், நத்தம் லிங்கவாடி அருகே உள்ள வளையபட்டி பகுதியை சேர்ந்த 25 வயது ஆண் என இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே திண்டுக்கல் மாவட்டத்தில் நோய்த்தொற்று அதிகரித்துவரும் நிலையில் அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதிகளை சுகாதாரத்துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர்.
தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களை தவிர கூடுதலாக 100 படுக்கைகள் மட்டுமே உள்ளதால் வரும் காலங்களில் நோய் தொற்று அதிகம் கண்டறியும் போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக திண்டுக்கல் எம்.வி.எம் அரசு பெண்கள் கலைக்கல்லூரியில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு சிகிச்சை மையம் தயாராக வைக்கப்பட்டுள்ளது.