சென்னை: மழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். முன்னதாக பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியிருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று நேற்று (நவம்பர் 11) அறிவிப்பு வெளியானது.
இது அடுத்த இரண்டு தினங்களில் மேற்கு திசையில், தமிழ்நாடு – இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் எனவும், இதன் காரணமாக அடுத்த ஏழு தினங்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முக்கியமாக இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.