கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாஅத் இஸ்லாமிய மத மாநாட்டில் கலந்து கொண்ட திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 89 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை 49 பேருக்கு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பின்னர், இவர்கள் அனைவரும் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து கரோனா பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு உயர் சிகிச்சை அளிப்பதற்காக அனைவரும் கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேலும், வெளி மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து வந்த 34 பேருக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு தற்போது வரை கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில், கரோனா பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தமிழகத்தில் கரோனா பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் இரண்டாவது இடத்தில் திண்டுக்கல் இருப்பது இங்குள்ள மக்களிடையே கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவை மீறிய திமுகவினர் மீது வழக்கு!