சங்கிலி போல் தொடர்ந்து முடிவடையாதநிலையில் பரவிவரும் கரோனா தொற்றின் தாக்கம் மக்களின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இக்கரோனா பெருந்தொற்று தமிழ்நாடு முழுவதும் விரைவாகப் பரவிவருகிறது.
பல்வேறு தடுப்பு முறைகள்
இதனைத் தடுக்க தமிழ்நாடு அரசு, பல்வேறு தடுப்பு முறைகளைச் செயல்படுத்தி வரும் நிலையில், ஆங்காங்கே கரோனா தொற்று பரவலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
மகப்பேறுக்காக சென்றுவந்த இளம்பெண்ணுக்குக் கரோனா
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி பேரூராட்சிப் பகுதியில் மூன்று நபருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில், நான்காவது வார்டைச் சேர்ந்த 47 வயதான நபருக்கும், ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த 37 வயது இளைஞருக்கும் சின்னாளப்பட்டியிலுள்ள மருத்துவமனையில் மகப்பேறுக்காக சென்றுவந்த 22 வயது இளம்பெண்ணுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ பரிசோதனை
இதனையடுத்து, மூன்று நபரும் திண்டுக்கல் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தொற்று பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சின்னாளப்பட்டி பேரூராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறையினர் முகாமிட்டு அந்தப் பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்துவருகின்றனர்.
மேலும், சின்னாளப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில், ஆங்காங்கே கரோனா விழிப்புணர்வு, தடுப்பு முறைகள் குறித்து ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க: 'மூன்று நாள்கள் வங்கி விடுமுறை ஏன்? - மதுரை மாநகராட்சி ஆணையரின் உத்தரவு!'