நாடு முழுவதும் கரோனா வைரஸ் பெருந்தொற்று தீவிரமாகப் பரவிவரும் நிலையில், அதனைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுவருகின்றன. குறிப்பாக, தமிழ்நாடு முழுவதும் மே 3ஆம் தேதிவரை முழுமையான ஊரடங்கு நீட்டிப்புச் செய்யப்பட்டு, பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.
ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 22 நாள்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில், வேலைவாய்ப்புகளை இழந்து நிற்கும் ஏழை, எளிய மக்கள், தினக் கூலித் தொழிலாளிகள் ஆகியோர் அத்தியாவசிய பொருள்கள் வாங்க பணம் இல்லாமல் அவதியுற்றுவருகின்றனர்.
இந்நிலையில், பாதிக்கப்படும் மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கும் நிவாரணப் பணிகளில் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே உள்ள தன்னார்வலர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள புது அத்திக்கோம்பை பகுதியில் வசிக்கும் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஊராட்சி மன்றத்தின் 9ஆவது வார்டு சுயேச்சை உறுப்பினர் முருகன் வழங்கினார்.
ஊராட்சி மன்றத் தலைவரோ, திமுக சட்டப்பேரவை உறுப்பினரோ கண்டுகொள்ளாத நிலையில் சுயேச்சை வார்டு உறுப்பினர் ஒருவர் இலவசமாகக் காய்கறிகள் வழங்கியது அப்பகுதி மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க : மாட்டுத்தாவணி பூச்சந்தை தற்காலிகமாக இடமாற்றம் - மாவட்ட ஆட்சியர்