திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிசேகம் கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் 16 ஆண்டுகளுக்குப் பின்பு, கும்பாபிஷேகம் வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த திருவிழாவிற்காக முகூர்த்தக் கால் நடுதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் கலந்துகொள்ள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் பழனி, வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் வருகை தந்த நிலையில், அனைவரும் ரோப் காரில் மலைக்கோயிலுக்கு சென்றனர்.
அவர்களுடன் பல்வேறு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் என ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரோப்காரில் செல்ல குவிந்தனர். அப்போது ரோப் காரில் நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள் ரோப் கார் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து பொதுமக்களை ஒப்பந்த ஊழியர்கள் அநாகரிகமாகப் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த செய்தி சேகரித்த செய்தியாளரிடமும் வாக்குவாதத்திலும் ஈடுபட்ட ஊழியர்கள் ரோப்கார் இயக்க மாட்டோம் என்று கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரோப் கார் சில நிமிடங்கள் இயக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டது.
அறநிலையத்துறை அமைச்சர் மலைக்கோயிலுக்கு மேலே சென்ற நிலையில், இயக்க மறுத்து போராட்டத்தில் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் திருக்கோயில் அதிகாரிகள் ஒப்பந்த ஊழியர்களை சமாதானம் செய்து வைத்தனர்.
இதையடுத்து சில நிமிடங்களுக்குப் பிறகு அதிகாரிகள் கெஞ்சி கேட்டதன் விளைவாக ரோப் கார் ஒப்பந்த ஊழியர்கள் ரோப் காரை இறக்கினர். இதுபோல பலமுறை ரோப்கார் ஊழியர்கள் பக்தர்களிடம் தகராறு செய்வதும், பின்னர் வேலை நிறுத்தம் செய்வதாக அதிகாரிகளை மிரட்டுவதும் தொடர்கதையாகியுள்ளது.
ரோப்கார் இயக்குவதற்கு தனியார் ஒப்பந்த ஊழியர்கள் மட்டுமே இருப்பதால் அவர்கள் அதிகாரிகளை மிரட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ரோப்கார் மற்றும் மின் இழுவை ரயில் ஆகியவற்றின் இயக்கும் தொழில்நுட்பப் பணியிடங்களில் நிரந்தர ஊழியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.