திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றிவருகின்றனர். இவர்களில் நிரந்தரப் பணியாளர்கள், தற்காலிகப் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்தத் தூய்மைப் பணியாளர்களுக்கு வார விடுமுறை வழங்கப்படவில்லை, சம்பளம் சரியாக வழங்கப்படுவதில்லை, பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் தூய்மைப்பணியில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்துகின்றனர், பணியாளர்களுக்குப் பணி செய்யும் இடங்களுக்குச் சென்று வர போதிய வாகன வசதிகள் செய்து தருவதில்லை,
துப்புரவு ஆய்வாளர் தூய்மைப் பணியாளர்களைத் தரக்குறைவாக நடத்துகின்றனர் போன்ற பல்வேறு கரணங்களை முன்வைத்தும், நகராட்சியைக் கண்டித்தும் இன்று (டிசம்பர் 29) காலை பணிக்குச் செல்லாமல் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கொடைக்கானல் காவல் ஆய்வாளர் முத்து பிரேம்சந்த், முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஸ்ரீதர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது தங்களது கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்தால் தான் போராட்டத்தைக் கைவிடுவோம் என்று தூய்மைப் பணியாளர்கள் கூறியுள்ளனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதைத் தொடர்ந்து போரட்டம் கைவிடப்பட்டது.